அதிகரித்துவரும் கொரோனாப் பரவல்

இலங்கையில் மீண்டும் கொரோனாப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பயணத்தின்போதும் முன்னரைப் போல முகக்கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் மீண்டும் கோவிட்-19 பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கோவிட் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக விலகல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படவேண்டும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாதொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை (25) கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் மூன்று பேரும், இரு பெண்களுமாக ஐந்து பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக மக்கள் முகக்கவசங்களை அணிந்து மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

அதிகரித்துவரும் கொரோனாப் பரவல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)