அதிகரிக்கும்  திருட்டுச் சம்பவங்கள்

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் சைக்கிள் மற்றும் பெற்றோல் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சந்தைகள், வங்கிகள், பள்ளிவாசல்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்ற சைக்கிள்கள் காணாமல் போவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன என்று சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உட்பட இரண்டு பள்ளிவாசல்களில் 04 சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களின் சைக்கிள்களே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டிருக்கின்றன.

இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்ற வேளைகளில் வீட்டு முற்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிக்கின்ற சைக்கிள்களும் களவாடப்பட்டு வருகின்றன. தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்கின்ற மாணவர்களின் சைக்கிளைகளும் திருடிச் செல்லப்படுகின்றன.

இவ்வாறு திருடப்பட்ட சில சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன் இச்சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் எனவும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

அதேவேளை, பின்னிரவு நேரங்களில் வீட்டு முற்றங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்து பெற்றோல் திருடப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும், சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பெற்றோல் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்படுகின்ற மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்தும் இரவு வேளைகளில் எரிபொருள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு திருட்டுச் சம்பவங்கிகளில் ஈடுபடுகின்ற அனேகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் இவ்விடயங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகரிக்கும்  திருட்டுச் சம்பவங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)