
posted 4th July 2022
இந்த நாட்டில் 74 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் பிரமாணிக்கம் அற்றவர்களாக வாழ்ந்தமையால், முத்துக் குளிக்கும் நாடாக இருந்த நாட்டை பிச்சைக்கார நாடாக ஆக்கிவிட்டார்கள்.
பிரமாணிக்கத்துடன் வாழ வேண்டும்; அடுத்து மற்றவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்; பகிர்ந்து வாழ்வதும் நன்மை செய்வதுமே எமது வாழ்வாகும் என்பதற்கு புனித மரியாளை மேற்கோள் காட்டி யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தில் சனிக்கிழமை (02.07.2022) மடு அன்னையின் ஆடி பெருவிழா கொண்டாடப்பட்டபோது இப் பெருவிழா கூட்டுத்திரப்பலியில் பங்குகொண்டு மறையுரை ஆற்றுகையில் யாழ் மறைமாவட்ட ஆயர் தொடந்து தெரிவிக்கையில்;
பகிர்ந்து வாழ்வதிலும் நன்மை செய்வதிலும் கருத்தாய் இருங்கள். பல்வேறு துன்பங்கள், துயரங்கள், தாகங்கள் எல்லாம் தாங்கியவர்களாக நாம் மடு அன்னையை நோக்கி வந்திருக்கின்றோம்.
கடந்த 74 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டவர்கள் இந்த நாட்டை சுரண்டி, இப்பொழுது ஒரு பிச்சைக்கார நாடாக ஆக்கி வைத்துனள்ளனர்.
இந்து சமுத்திரத்தினிலே முத்துக்குளிக்கும் நாடு எமது அழகிய இலங்கைத் தீவாகும். எம் திருநாடாம் இலங்கையை 74 ஆண்டுகளாக ஆண்டு, சுரண்டி, உறிஞ்சி இன்று பிச்சை நாடாக மாற்றிய பெருமை ஆண்டவர்களுக்கே உரியதாகும்.
இந்நாட்டின் மக்களை தம் சொந்த மக்களென்று கூடப் பார்க்காமல் தமது சயநலத்தை மட்டும் தலையிலேற்றி அனைவரினதும் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கி மடு அன்னையை நோக்கி வர விருப்பம் அனைத்து பக்தர்களின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டார்கள் ஆட்சி செய்தவர்கள்.
ஆனால் நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்றால் மரியன்னை எமக்காக பரிந்து பேசி எமக்கு வேண்டியதை பெற்றுத் தருவாள் என்ற நம்பிக்கையே. தனது இறை மகனிடம் வேண்டி கேட்பதைப் பெற்றுத் தருவாள் செய்வாள் என்ற ஒரே நம்பிக்கையே ஆகும்.
கானாவூர் திருமண வீட்டில் இரசம் தீர்ந்து போகும் வேளையை உணர்ந்த மரியாள் தன் மகனிடம் கேட்டு அக்கல்யாணத்தை குறையின்றி நடைபெற வைத்த நமது அன்னை நாம் கேட்கும் ஒவ்வொருவரினன் வேண்டுதல்களையும் மகனிடம் பரிந்துரைக்கவே செய்வாள்.
இந்த விசுவாசம்தான் எம்மை இங்கு அழைத்து நிற்கின்றது. இயற்கை ஒன்றும் செய்ய முடியாத நிலையிலும் நாம் இந்த விசுவாசத்துடன் மரியன்னையிடம் கையேந்துவோம்.
மரியன்னையிடம் நாம் காண்பது முதலாவது பிரமாணிக்கம். 'ஆகட்டும்' என கூறிய மரியன்னை இறுதி வரை அவள் பிரமாணிக்கமாகவே இருந்தாள்.
அத்துடன், தனது ஒரே மகனை சிலுவை அடியில் நின்று எமக்காக அவரை ஒப்புக் கொடுத்தவள் மரியாள்.
இன்று பிரமாணிக்கம் எம்மிலிருந்து அற்று போகின்றது. இவைகள் தொழிலாக இருக்கலாம், குடும்ப வாழ்வாக இருக்கலாம், ஏன் இன்று துறவற வாழ்க்கையிலும் பிரமாணிக்கம் அற்று போகின்றது.
ஏனென்றால், நாம் இன்று யாவற்றுக்கும் காரணம் சொல்ல துணிந்து விட்டோம். முன்பு கணவன் மனைவியாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அனால் இன்று திருமணம் முடித்து ஒரு சில மாதங்கள், வருடங்களுக்குள் விவாகரத்து செய்ய துணிந்து விடுகின்றனர்.
இன்பத்திலும், துன்பத்திலும் நாம் பிரமாணிக்கமாக இருப்பேன் என கூறிய தம்பதினர் சுயநலம் காரணமாக மிகவும் குறுகிய காலத்தக்குள் பிரிந்து விடுகின்றனர். காரணம் பிரமாணிக்கம் அற்று போய் விடுகின்றது. இவர்கள் நான் என்ற வட்டத்துக்குள் மூழ்கி நாங்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.
ஆசிரியர் பாடசாலையில் தனது வகுப்பில் படிப்பிக்க மாட்டார் ஆனால் தனது தனியார் வகுப்பில் இவர் ஒரு சிறந்த ஆசிரியர் என பெயர் ஓங்குகின்றது. இவரிடம் இருந்த பிரமாணிக்கம் எங்கே?
துறவற வாழ்க்கையிலும் இவ்வாறே. காரணம், நாங்கள் அதிகம் படித்து விட்டோம் என்ற பெருமையில் கீழ்படிதல் என்பது ஒரு துளி கூட இல்லாது இவர்களிடம் போகின்றது. ஆனால் மரியாளோ இறுதிவரை பிரமாணிக்கமாக சீவித்தாள்.
நாமும் மரியாளைப்போல் பிரமாணிக்கத்துடன் வாழ வேண்டும். அடுத்து அவளைப்போல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். பகிர்ந்து வாழ்வதும் நன்மை செய்வதுமே கிறிஸ்தவ வாழ்வாகும்.
இறைவன் எம்மிடம் இறுதி நேரத்தில் கேட்பது நீ சின்னஞ் சிறுவர்களுக்கு என்ன செய்தாய்? என்பதாகும்.
இந்த உலகம் உருண்டு போவது வல்லர்களால் அல்ல, ஆனால் இந்த உலகத்தில் ஓரிரு நல்லவர்கள் இருப்தாலே ஆகும்.
இந்த நாட்டில் 74 வருடங்கள் வல்லவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தேர்தல் வரும் வல்லவர்களாக மாறுவர். ஆனால் நன்மை செய்ய மாட்டார்கள். சுரண்டி வாழ்ந்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர்.
ஆகவே நாம் பகிர்ந்து வாழ்வதும் நன்மை செய்வதுமே எமது வாழ்வின் அடித்தளமாக அமைய நாம் மரியன்னையிடம் வேண்டுவோம் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)