
posted 10th July 2022
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே விசேட ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு தினமும் பயணிக்கும் அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கான விசேட புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சேவையை ஆரம்பிப்பதற்கான இணக்கத்தை அமைச்சரவை மட்டத்திலும் ஏற்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த ரயில் திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் செனவிரத்ன யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ரயில் நிலைய அதிபர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன், மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் ஸ்ரீமோகனன் ஆகியோரை சந்தித்து ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி, நாளை திங்கட்கிழமை முதல் இந்த விசேட ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில் திணைக்களம் அறிவுத்துள்ளது.
இதேவேளை, நாளை முதல் ஆரம்பிக்கவிருக்கும் விசேட ரயில் சேவைக்கான நேரடி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்த ரயில், 6.40 மணிக்கு யாழ். ரயில் நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12 மணிக்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு பளையை 7.30 மணிக்கும், கிளிநொச்சியை 7.56 மணிக்கும், அறிவியல்நகர் ரயில் நிலையத்தை 8.05 மணிக்கும் வந்தடைந்து 8.11 மணிக்கு முறிகண்டியை அடையும்.
காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்திலிருந்து காலை 6.05 மணிக்கும், தெல்லிப்பளையிலிருந்து 6.09 மணிக்கும், மல்லாகத்திலிருந்து 6.14 மணிக்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22 மணிக்கும், கோண்டாவிலிருந்து 6.27 மணிக்கும், கொக்குவிலிருந்து 6.31 மணிக்கும் புறப்பட்டு 6.35 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00, சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாள் 7.21 மணிக்கு புறப்பட்டு பளையை 7.30 மணிக்கு வந்தடையும். அங்கிருந்த ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50 மணிக்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56 மணிக்கு வந்தடையும்.
மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்த ரயில்பளையிலிருந்து 10.31 மணிக்கும், கொடிகாமத்திலிருந்து 10.48 மணிக்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39 மணிக்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59 மணிக்கும், கொடிகாமத்திலிருந்து 3.11 மணிக்கும் புறப்பட்டு, பளையை 3.38 மணிக்கும், கிளிநொச்சியை 3.56 மணிக்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10 மணிக்கு வந்தடையும்.
மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40 மணிக்கு புறப்படும் இந்தப் ரயில் அறிவியல்நகரை 4.46 மணிக்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06 மணிக்கும், பளையிலிருந்து 5.30 மணிக்கும் புறப்பட்டு 6.44 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20 மணிக்கு காங்கேசன்துறையை அடையும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)