ரணில் வெற்றி வாகை சூடினார்

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி தெரிவில் பதில் ஜனாதிபதி வெற்றிவாகை சூடி இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (20.07.2022) இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 19 ஆம் திகதி நடைபெற்ற பொது, பதில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜே.வீ.பி. தலைவர் அனுர குமார திஸநாயக்க ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததுடன், மும்முனைப் போட்டியாகவும் அமைந்தது.

இன்று குறித்த இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கு வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குகள் எண்ணிக்கையின்படி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும், அமைச்சர் டலஸ் அழகப் பெருமவுக்கு 82 வாக்குகளும், அனுர குமார திஸ நாயக்கவுக்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததுடன்,
ரணில் விக்கிரமசிங்க வெற்றி வாகைசூடி இடைக்கால ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பள்ளித் தோழரும், நாடாளுமன்ற சபை முதல்வரும், மூத்த அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவுள்ளார்.

அடுத்த சில தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ள இதே நேரம் ரணில் விக்கரமசிங்க புதிய இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுமுள்ளார்.

இதேவேளை காலி முகத்திடல் தன்னெழுச்சிப்போராட்டக்காரர்கள் ரணில் பதவி விலக வேண்டுமென்ற போராட்டத்தை இன்னும் உக்கிரமாகத் தொடரப்போவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரணில் வெற்றி வாகை சூடினார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)