யாழ். மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இரவு வல்வெட்டித்துறையை சேர்ந்த சேர்ந்த சசிகலா, கதிர், கமலா ராணி உள்ளிட்ட 8 பேர் ஒரு படகில் புறப்பட்டு திங்கட்கிழமை (04) காலை 5 மணியளவில் தனுஷ்கோடியை அடுத்த அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கினர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. அதேபோல் டீசல் மற்றும் பெற்றோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 2 லீற்றர் மண்ணெண்ணெய் வாங்க 4 நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

தொடர் மின்வெட்டு அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.

மேலும் சமீப காலமாக வடக்கு மாகாண பகுதியில் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் கடத்திக் கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகளைக் கடத்தும் கும்பல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்பு தேடி இலங்கைப் பணம் தலா ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழ்ப் பெண் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் எட்டு பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளதாக மரைன் பொலிஸார் கூறினர்.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)