மட்டக்களப்பு ஊறணியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த மக்களுக்குக் கிடைத்த ஏமாற்றம்

மட்டக்களப்பு ஊறணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து தினங்களாக எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு தமக்கு கடந்த ஐந்து தினங்களாக வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதன்போது அங்கு வருகை தந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளை சோதனையிட்டனர்.

எனினும் அங்கு எந்த எரிபொருளும் இருக்காமை உறுதிப்படுத்தப்பட்டதுடன் எரிபொருள் நிரப்பு நிலையமும் சோதனையிடப்பட்டதுடன் அங்கும் எந்தவித எரிபொருளும் கைப்பற்றப்படாத நிலையில் அது தொடர்பில் அங்கு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
தாங்கள் ஐந்து தினங்களாக வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்தபோதிலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனினும் தமது எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்த எரிபொருட்கள் அனைவருக்கும் பகிரப்பட்டதாகவும் தாங்கள் எந்தவித ஏமாற்றத்தையும் செய்யவில்லையெனவும் நிலையத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த மக்களுக்குக் கிடைத்த ஏமாற்றம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)