
posted 12th July 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன், வாழ்வாதார இடையூறுகள் தலைவிரித்தாடுகின்றது.
நாளாந்தம் கிடைக்கும் வேலையை நம்பியே வாழும் எத்தனையோ குடும்பங்களின் அவலநிலையினை ஆளுபவர்கள் உணர்வார்களா? இல்லை அவர்களின் சிந்தையில் ஏற்றத்தான் முடியுமா?
இவ்வாறு, நாளை எப்படி விடியும் என்று பயத்துடனும், நமக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வியினை ஏந்தியவருள் சிலர், ஒரு சிறு வெளிச்சமாகவது மிளிரட்டும் இருக்கும் உயிரினையாவது காத்திடலாமென அயல்நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றது.
இவ்வாறான நிலையில், அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்பவர்கள் அவரவர் தொழிலுக்காகவும், தங்கள் தொழிலைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும, அவர்களது சொந்த வாகனங்களைப் பாவிக்க முடியாமல், தனியார் வாகனங்களை நம்பி தூரப் பயணம் செய்து கடமை புரிய வேண்டிய கட்டாயத்தினுள் அகப்பட்டு அவதியுறுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
இவ்வாறாக பயணம் செய்து கடமை முடிந்து வீடு திரும்ப போக்குவரத்தின்மையால் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை நேற்று முன்தினமும் மன்னார் மாவட்டத்தில், மடுப்பகுதியில் நடைபெற்றது.
அத்துடன், இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் வங்கியில் வேலை செய்யும் பெண்களிருவர் செயார் ஆட்டோவில் ( ) இவ்வளவு காலமும் ரூபா 1500 செலவு செய்து கடமைக்கு சென்று வந்தார்கள். ஆனால், அந்த ரூபா 1500ஐயும் வங்கியே அவர்களுக்குக் கொடுத்து வந்ததாக சொன்னார்கள். ஆனால், இப்போதுள்ள எரிபொருளற்ற நிலையில் ஆட்டோவிற்கு அவர்கள் கொடுக்க வேண்டியது ரூபா 5000 ஆக அதிகரித்து விட்டது. இவ்வுயர்வுக்கு வங்கி பொறுப்பு கொள்ளமாட்டாதெனக் கூறிவிட்டது.
இவ்வாறு பலவிதமான இன்னல்களை நித்தமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இவை எல்லாம் தீருமா? எப்போது தீரும்?