
posted 4th July 2022
மன்னார் பகுதியில் எரிபொருள் நிலையங்களில் இடம்பெற்றுவரும் பதட்டநிலையை தணித்து வாகனம் வைத்திருப்போர் யாவரும் சுமூகமான முறையில் எரிபொருளை பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் மேற்கொண்டுள்ளார்.
மன்னார் பகுதிக்கு ஓரளவு திருப்திகரமாக எரிபொருள் வருகின்றபோதும் இவைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படாததால் பலர் பாதிப்படைந்த நிலையில் இருந்து வருவதாக பலதரப்பட்டவர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
இவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்ட அரசாங்க அதிபர் 05.07.2022 தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச செயலகங்கள் ஊடாக வாகனங்களுக்கென வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையின் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என்று திருமதி ஸ்டான்லி டீமெல் தெரிவித்துள்ளார்
பிரதேச செயலகங்களில் உள்ள கிராம அலுவலர்கள் பிரிவுகளை இணைத்து வாகனங்களுக்கு ஒரு நாள் என இவ் எரிபொருள் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கான நேரமும் முதல் நாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விஷேடமாக வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தின் போது சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அட்டையுடன் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையையும் கொண்டு வருதல் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தின் இரண்டு ஐழுஊ நிலையத்தினால் எரிபொருள் வழங்கப்பட்டாலும் 15ம் திகதியின் பின்னர் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் கிடைக்கப்பெற்றால் கிராமங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களில் இவ் எரிபொருளை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாமையால் அருகிலுள்ள நிலையத்தினூடாக வழங்கப்படும்.
இதேபோன்று முசலி மற்றும் மடு பிரதேச வாகனங்களுக்கும் அண்மைய நிலையங்களிலும் குறித்த நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் மன்னர் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)