
posted 26th July 2022
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக வன்னியார் வட்டாரத்தைச் சேர்ந்த கலந்தர் லெவ்வை றபீக் நியமனம் செய்யப்பட்டு, பதவிப் பிரமாணம் செய்ததுடன், சபை அமர்விலும் பங்கு கொண்டார்.
நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் முன்னிலையில், புதிய உறுப்பினர் கலந்தர் லெவ்வை றபீக், பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், வன்னியார் வட்டார முக்கியஸ்த்தர்கள் உட்பட பிரதேச கல்விமான்கள், பிரமுகர்கள் பலரும் பிரதேச கல்விமான்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த பிரதேச சபைத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற வேட்பாளர்களையும், பட்டியல் வேட்பாளர்கைளயும், சபை ஆட்சிக்காலத்துள் உறுப்பினர்களாக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்மாதிரி செயற் திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் றபீக்கின் உறுப்பினர் நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவிப் பிரமான நிகழ்வின் போது தவிசாளர் அஷ்ரப் தாஹிர் உட்பட சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் புதிய உறுப்பினர் றபீக்கின் நியமனத்தை வரவேற்று வாழ்த்தி உரையாற்றியதுடன், சிறந்த சமூக சேவையாளரான உறுப்பினர் றபீக், வன்னியார் வட்டார மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் நிறைவேற்றுவாரெனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.
புதிய உறுப்பினர் றபீக் பதவிப்பிரமான நிகழ்வில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“இலங்கை முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைவென்ற, சத்தியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் அரசியல் பரப்பில் முக்கியத்துவமிக்க கட்சியாகும்.
சுயநல நோக்கின்றி மக்கள் சேவையை சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் சிறந்த தலைமையின் வழிகாட்டல் எமக்கு பெரும் உத்வேகமானது.
இந்த வகையில் மக்கள் சேவை ஒன்றையே தன் இலக்காகக் கொண்டு சேவையாற்றிவரும் எமது தவிசாளர் அஷ்ரப் தாஹிர், எமது பிரதேச மக்களினது மட்டுமன்றி அம்பாறை மாவட்ட மக்களிடையே பரந்துபட்ட பேராதரவையும், நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகையாவார்.
கட்சி வட்டாரத்தில் குறிப்பாக தலைவரிடத்திலும், கட்சி உயர் மட்டத்திலும் நன் மதிப்பு பெற்றுத் திகழும் அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய பங்குதாரராகவும் திகழ்கின்றார்.
மக்கள் சேவைக்கான எனது உறுப்பினர் நியமனத்தில் தவிசாளர் அஷ்ரப் தாஹிர் காட்டிய அக்கறைக்கும், செயற்பாட்டிற்கும் விசேட நன்றிபகர நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
நிகழ்வுக்கு வருகை தந்த புதிய உறுப்பினர் றபீக்கிற்கு பிரதேச சபை முன்றலில் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)