பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் கொண்டு சென்ற ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர் மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்பாணம் குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்


பலவகைச் செய்தித் துணுக்குகள்

கியூவைத் தடுக்க புதிய முறை

யாழ்ப்பாணம் கச்சேரி அருகிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில் தேவையற்ற காத்திருப்பை தவிர்ப்பதற்காக வாகன இலக்கங்களைப் பதியும் நடைமுறை முதல்கட்டமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பின்பற்றப்பட உள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இதன்படி ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் முதல் 400 ஓட்டோக்கள், 100 கார்கள், 1000 மோட்டார் சைக்கிள்களின் வாகன இலக்கங்கள் பதியப்பட்டு எரிபொருள் அந்த ஒழுங்கில் வழங்கப்படும்.

அதேவேளை, அதற்கு மேலாக நிற்கும் வாகனங்களின் இலக்கம், வாகன உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் என்பன பதியப்பட்டு அவர்களுக்கு அடுத்த முறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்போது முதல் நாளே குறுஞ்செய்திச் சேவை ஊடாக தகவல் அளிக்கப்படும்.

அதன் பிரகாரம் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் நாளில் அவர்களுக்கு எனது ஒதுக்கப்படும் நேரத்தில் வந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேவையற்று காத்திருப்பதை தடுக்க முடியும் என்றார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இலங்கையில் மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் தண்ணீர் இன்மையால், தற்போது நடைமுறையிலுள்ள 3 மணிநேர மின்வெட்டை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் ஏழு நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும்.

ஏ, பி, சி, டி, ஈ, எவ், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், ரி, யூ, வி, டபிள்யூ ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அத்துடன் எம், என், ஓ, எக்ஸ், வை, இசற் ஆகிய வலயங்களில் காலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரை மின்துண்டிப்பு இடம்பெறும்.

மேலும், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை மின்துண்டிக்கப்படும்.


மீன்பிடிக்க எல்லை தாண்டியதால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும் விசைப்படகொன்றில் கோடியாக்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டனர். இவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (05) கடற்தொழில் நீரியல் வளத்துறை ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இரு தினங்களில் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



ஆணின் சடலம் கரை ஒதுங்கியது

அம்பாறை - உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உமரி பகுதி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சம்பவ தினமான திங்கள் இரவு 6.30 மணி அளவில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை கண்டுள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேக நபர்கள் 51 பேரும் விளக்க மறியலில்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரான் ஹஷீமின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் செவ்வாய்க் கிழமை (05) காணொளி மூலம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)