
posted 7th July 2022
இலங்கைத் தீவில் புரையோடிப் போய் உள்ள 74 வருட தமிழினப் பிரச்சினைக்கான நிரந்தர அதிகாரப் பகிர்வு புதிய அரசியலமைப்பு ரீதியாக தீர்வாக உறுதி செய்யப்படுமாகில் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை மீளக் கட்டியமைக்க முடியும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபா குகதாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை மீளக் கட்டியமைக்க உதவும் நாடுகள் டொலர்களையோ அல்லது பொருள் உதவிகளையோ அல்லது நன்கொடைகளையோ வழங்கி நிரந்தரமாக நிமிர்ந்து நிற்க வைத்துவிடலாம் என்று நினைத்தால் அது தவறான தப்புக் கணக்காகிவிடும் இவை யாவும் தற்காலிகமாக ஓட்சிசன் கொடுக்கும் செயற்பாடுகளே ஆகும்.
தற்காலிக உதவிகளை வழங்கி விட்டு தங்களுக்கு தேவையான நவகாலணித்துவ பூகோள நலன்களை நாடுகள் இலக்கு வைத்தால் இலங்கை மக்களுக்கு ஊழல் அற்ற நேர்மையான ஆட்சியாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாது போவதுடன் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து இலங்கை மீண்டெழ முடியாது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தலை கொடுக்க இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா, யப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் பலதரப்பட்ட முனைப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நாடுகள் அனைத்தும் அவர்களது முயற்சியில் வெற்றிகரமாக இலங்கையை மீட்க வேண்டுமாக இருந்தால் ஒரே ஒரு வழி இருக்கிறது அதற்கான தீர்வினைக் கண்டு விட்டால் வீழ்ந்துள்ள இலங்கைப் பொருளாதாரமும் அரசியலும் நிலையாக எழுந்து நிற்க முடியும் அதுதான் இலங்கைத் தீவில் புரையோடிப் போய் உள்ள 74 வருட தமிழினப் பிரச்சினைக்கான நிரந்தர அதிகாரப் பகிர்வு புதிய அரசியலமைப்பு ரீதியாக தீர்வாக உறுதி செய்யப்படுவது.
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு இலங்கைத் தீவின் நிரந்தர எழுச்சிக்கு போதிய அளவு புலம்பெயர் தேசத்து தமிழ் முதலீட்டாளர்களின் பெரும் தொகையான முதலீடுகளும் டொலர்களும் கைகொடுக்கும். இதன் மூலமே இலங்கையின் வீழ்ச்சியை மீட்க தலை கொடுக்கும் நாடுகளுக்கு வெற்றிக்கான வழியாகும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)