
posted 8th July 2022
ஆவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட 45பேர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் மார்க்கமாக ஆவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) அதிகாலை கைதுசெய்தனர்.
திருகோணமலை - குச்சவெளிக் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட 45 பேரில் 25 பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாவர். கைதான அனைவரும் விசாரணைகளுக்காகக் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்லி கல்லூரி மாணவனின் கண்டுபிடிப்பு
யாழ்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக இராஜ அரவிந்தன் தலமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் பாடசாலை உப அதிபர் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழிபாட்டைத் தடுக்கக்க காவலரண் - குமறிய மக்கள் அகற்றினர் காவலரணை
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திங்கட்கிழமை (04) மாலை திரண்டு அகற்றியதால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதற்காக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இருந்தபோதிலும் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.
இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் ஏ-35 வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டபோதிலும் தீர்த்தம் எடுக்கச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதன் தொடராக அங்கு ஒன்று திரண்ட கிராமத்து மக்கள் இராணுவக் காலரணின் வேலிகளை அகற்றி அப்புறப்படுத்தினர்.

விறகு எடுக்கச் சென்றவர் யானை தாக்கி உயிரிழந்தார்
திருகோணமலை-வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுபகுதிக்குள் விறகு எடுக்க சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதையடுத்து, கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) மாலை இடம்பெற்றதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் 57 வயதுடைய டி.டி. ஆரியரத்தின எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில், சமைப்பதற்காக காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்
எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆரம்பித்து மாநகர பகுதியினுடாக ஊர்வலமாக சென்று பின்னர் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.
இதன்போது தாம் எரிபொருள் பிரச்சனை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், அத்தியவசிய சேவை என சில துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எமது சேவையும் அத்தியவசிய சேவையின் ஒரு பகுதியாக கருதி எமக்கான எரிபொருளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓட்டோ சாரதிகள் கோரக்கை விடுத்தனர்.
குடும்பச்சண்டை கொலையில் முடிந்தது
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற சண்டை காரணமாக, ஆண் ஒருவர் கத்தியால் நேற்று முன் தினம் புதன்கிழமை (06) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி கலலூரி வீதி பாலைத்தேனாவைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தாயார் வீட்டில் சம்பவதினமான நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக உருவாகியதையடுத்து, மனைவியின் உறவினர்கள், மைத்துனர் மீது கத்தியால் வெட்டியதையடுத்து, சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் 17 வயதுடைய மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)