குற்றங்களுக்குத் துணைபோன ஆட்டோவுக்கு தூக்குத் தண்டனை

இலங்கையில் எரிபொருள் பெற வரிசையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் பாகங்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றை திருடுவதற்காக திருட்டுக் கும்பல்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஓட்டோவை ராஜிகிரிய, ஒபேசேகரபுர பிரதேச வாசிகள் இணைந்து மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் குறித்த ஓட்டோவில் வந்து அவற்றை வரிசையில் நிறுத்திவிட்டு, அதே வரிசையில் நிற்கும் வாகனங்களின் பாகங்களை திருடி வந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அத்துடன், வாகனங்களில் எஞ்சியிருக்கும் சிறிதளவு பெற்றோலைக்கூட இவர்கள் திருடி வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் இருந்து எரிபொருள் வரிசைகளில் திருட்டுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே எரிபொருள் வருகையை எதிர்பார்த்து நாட்கணக்கில் மக்கள் தங்கள் வாகனங்களை வரிசையில் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் அந்த வாகனங்களின் பாகங்கள் திருடப்பட்டு வருவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குற்றங்களுக்குத் துணைபோன ஆட்டோவுக்கு தூக்குத் தண்டனை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)