ஒழுங்கு முறையான எரிபொருள் விநியோகம் இருப்பின் ஒரு குளப்பமும் வராது  - சிவகரன்

மன்னார் மாவட்டத்துக்கு திருப்திகரமாக எரிபொருள் வருகின்றபோதும் இங்கு விநியோகிக்கும் முறையில் சரியான ஒழுங்கு முறைகளை கையாளப்படாத நிலையால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுவதாக மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வி.எஸ்.சிவகரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வெள்ளிக்கிழமை (01.07.2022) அனுப்பிவைத்துள்ள மடலில் தெரிவித்திருப்பதாவது;

மன்னார் மாவட்டத்தின் புள்ளி விபரங்களின்படி கடந்த சில வாரங்களாக சாதாரண நிலமையை விட பல மடங்கு எரிபொருள் வந்துள்ளன. ஆனால் வாகனத்திற்கு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது. ஒழுங்கு முறையாக எந்தவித ஒழுங்கும் இங்கு உருவாக்கப்படவில்லை. அதிகாரிகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகளே இதற்கு காரணம் என பொதுமக்ககள் குற்றம் சாட்டுகின்றனர்.

மிகக்குறைந்த சனத்தொகை கொண்ட மாவட்டத்தில் ஒழுங்கு முறைகளை உருவாக்குவது ஓரளவு இலகுவானது. அசாதாரண சூழ்நிலையில் பணி செய்வது என்பது சவாலுக்கு உரியதே என்பதை நாம் புரிந்துகொள்ளமல் இல்லை. எனவே மீனவர்களும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அரச ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்கும் முறைமை முற்றிலும் முரணானது. அதில் பல ஆள் மாறாட்டமும், வணிகமும் நடைபெறுகின்றன. இவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. 30.06.2022 ஒரு டோக்கன் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகியது.

அத்தியவசிய தேவையுள்ள திணைக்களங்களுக்கு ஒதுக்கீடு செய்யுங்கள். குறித்த திணைக்களங்கள் இவர்களுக்கு பகிர்வு செய்யட்டும்.

யார் அந்த அத்தியவசிய அரசு நிறுவனங்கள் என்பதில் பெரும் கேள்வி உண்டு. இந்த அத்தியவசிய தேவையை பெற எரிபொருள் இல்லாமல் எப்படி பொதுமக்கள் வருவார்கள் என்பதே மிகப் பெரிய கேள்வி?

கடந்த வாரத்தில் வைத்தியசாலை போவதற்கு எரிபொருள் இல்லாமல் நாட்டில் மூவர் இறந்து போனார்கள் என்பது யாவரும் அறிந்ததே! மன்னார் நகரசபையும் தமது துப்பரவு பணியை நிறுத்திவிட்டதாக அறிகிறோம்.

மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், பால் வியாபாரிகள், எந்த சேவைக்குள் உள்ளடங்குகின்றார்கள்? இவர்கள் அத்தியாவசியமானவர்கள் இல்லையா? இவர்களைப்பற்றி எவரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லையே.

எந்த சூழலிலும் வல்லோன் வாழ்வான் எனும் எழுதப்படாத விதியே நடைமுறையில் உள்ளது. சகல வாகனங்களுக்கும் பங்கீட்டு அட்டை வழங்குங்கள் மன்னார் மாவட்டம் என்பது 05 பிரதேச செயலாளர் பிரிவைக் கொண்டது. நகரத்தை கடந்தும் கிரமங்களில் உள்ளவர்களுக்கும் எரிபொருள் கிடைக்க வழி ஏற்படுத்துங்கள். குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசத்தில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் கூட இல்லை.

ஒழுங்கு முறையான ஒழுங்கமைப்பு இன்மையால் அவசியம் எரிபொருள் தேவைப்படுகிறவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதிய எரிபொருள் மாபியா முகவர்கள் உருவாகி விட்டனர். ஒருலீற்றர் பெற்றோல் 2000 ரூபாவுக்கு மேல் விற்பனை ஆகிறது. டீசல் 1000 ரூபாவுக்கு மேலாகவும், மண்னெண்ணை 1000 ரூபாவுக்கு மேலாகவும் வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு போய் விற்பனை செய்கின்றார்கள்.

இதை உருவாக்கியது ஒழுங்கமைப்பு இல்லாத எரிபொருள் பகிர்வே. தயவு செய்து உடனடியாக ஒரு முறைமையை உருவாக்குங்கள். ஒழுங்கமைப்பு இன்மையால் முரண்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்த சம்வங்களும் நிகழ்ந்துள்ளன. ஒரே நபர்கள் மாறி. மாறி எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பயன் பெறுகிறார்கள்.

ஆகவே இந்த நிலமை தொடர்ந்தால் மன்னார் மாவட்டத்தில் மிகப் பெரும் வன்முறை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதை தடுப்பதற்கான தார்மீக பொறுப்பும் கடமையும் தங்களுக்குரியது என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இக் கடிதத்தின் பிரதி மன்னார் நகர் பிரதேச செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு முறையான எரிபொருள் விநியோகம் இருப்பின் ஒரு குளப்பமும் வராது  - சிவகரன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், மன்னார் மாவட்டம்)