எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்கரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக ஒரு படகில் வந்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்டைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது. புதன்கிழமை (20.07.2022) இராமேஸ்வரம் துறை பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக பல இலுவைப்படகுகளில் மீனவர்கள் வந்திருந்தபோதும் இவற்றில் இரு படகுகளில் வந்த 11 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் உள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சமயம் தலைமன்னார் மற்றும் நாச்சிக்குடா கடற்பரப்புக்குள் கடல் றோந்தில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இவர்களை படகுடன் கைது செய்தபோது 5 மீனவர்களுடன் வந்த ஒரு படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் காற்றில் வலிந்து எல்லை தாண்டி வந்துள்ளதாக கடற்படையனரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் படகின் இயந்திரத்தின் நிலையை பரிசோதித்த கடற்படையினர் இவர்களின் படகின் இயந்திர கோளாரை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் 5 பேரையும் படகையும் அவ்விடத்திலிருந்தே இவர்களின் இடத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் மற்றைய படகையும், அதில் மீன் பிடிக்காக வந்த 6 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படையினர் மன்னார் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் வியாழக்கிழமை (21.07.2022) ஒப்டைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களை இன்றையத் தினம் (21) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையை மன்னார் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஐஎன்டி-ரிஎன்-10எம்என்-405 என்ற படகில் வந்து கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு மடுவுப்பிச்சையோச் (வயது 44) நாகசாமி ஆனந்தபாலி (வயது 35) ஆரோக்கியசாமி அச்சுணன் (வயது 22) ராமர் அந்தோணி கிறிஸ்தோப்பர் (வயது 37) ராஜ் அருட்குமார் (வயது 22) சியம்புலிங்கம் தங்கப்பாண்டி (வயது 68) ஆகியோவராவர்.

பின்னைய செய்தி

மேற்குறிக்கப்பட்ட ஆறு மீனவர்களும் எதிர்வரும் 4 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)