
posted 1st July 2022
அரச உத்தரவாதத்தை மீறி மன்னார் ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையம் மன்னார் சுகாதார சேவைகள் திணைக்கள ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க மறுத்தமையால் வைத்தியசாலை செயற்பாடுகளை இடைநிறுத்தி தொழிற் சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (01.07.2022) மன்னார் நகரில் இடம்பெற்றது.
இது தொடர்பாக தெரிவிக்கப்படுகையில்;
அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் தங்கள் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைவாக மன்னார் சுகாதார சேவைகள் ஊழியர்கள் மன்னார் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (01.07.2022) சென்றனர்.
ஆனால் அங்கு எரிபொருள் இல்லையென இவர்களுக்கு வழங்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் ஊழியர்களுக்கு அரச உத்தரவாதத்தின்படி எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார தொழிற் சங்க ஒன்றியம் மன்னாரில் வெள்ளிக்கிழமை (01.07.2022) காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை தொழிற் சங்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப் போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (01.07.2022) நண்பகலுக்கு முன் தங்களுக்கு எரிபொருள் தொடர்பான சரியான முடிவு கிடைக்க வேண்டும் என கோரியே மன்னார் வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவையை தவிர ஏனைய வேலைகளை இடைநிறுத்தி நடை பேரணியாக மன்னார் மாவட்ட செயலகம் நோக்கி சென்று மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் மகஐர் ஒன்றை கையளிக்கச் சென்றிருந்தனர்.
அங்கு அரச அதிபருக்க பதிலாக மன்னார் மேலதிக அரச அதிபரிடம் இவர்கள் அம் மகஜரை கையளித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை 01.07.2022) மன்னார் மாந்தை மேற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் வருகின்றமையால் அது சுகாதார சேவைகள் ஊழியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் இப் போராட்டம் தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் இருப்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், மன்னார் மாவட்டம்)