எட்டாவது ஜனாதிபதி பதவிப் பிரமாணம்

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (21) பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பதவி ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின் போது பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நேற்று (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய இடைக்கால ஜனாதிபதித் தெரிவின் போது மும்முனைப்போட்டி ஏற்பட்டபோதிலும், ரணில் விக்கிரமசிங்க அதிகப்படியான, அதாவது, 134 வாக்குகள் பெற்று தெரிவானார்.

இலங்கையில் 1978இல் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிளவுபட்டது போதும் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என அனைத்து கட்சிகளுக்கும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறை கூவல் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் “ரணில் கோ ஹோம்” போராட்டத்தை ஆரம்பித்துள்ள காலி முகமுகத்திடல் போராட்டக்காரர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எட்டாவது ஜனாதிபதி பதவிப் பிரமாணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)