
posted 6th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானாவின் மறைவு ஓர் ஆளுமையின் அஸ்தமனம்
இலங்கையிலும், கடல் கடந்த நாடுகளிலும் சன்மார்க்கப் பணியிலும், தமிழ், அரபு இலக்கியத்திலும் அரும்பணியாற்றிய மௌலானா ஸெய்யித் கலீல் அவ்ன் அவர்களது மறைவு ஓர் ஆளுமையின் அஸ்தமனம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தில், திருச்சியில் காலமான மௌலானா ஷம்ஸுல் உஜூத் ஜமாலிய்யா அஸ் ஸெய்யத் கலீல் அவ்ன் அவர்களின் மறைவுச் செய்தி நான் வெளிநாட்டில் மாநாடு ஒன்றிற்கு செல்லுகின்ற வழியில் என்னை எட்டியது. அதனையிட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழித் தோன்றலான ஜமாலியா அஸ் ஸெய்யித் யாசின் மௌலானாவின் மூன்றாவது மகனாக இலங்கையின் தென் மாகாணத்தில் வெலிகமையில் பிறந்த மௌலானா கலீல் அவுன் அரபு, தமிழ் மொழிகளில் கற்றுத் தேறி, வெலிகமை, சிலாபம், புத்தளம், அனுராதபுரம் போன்ற இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் கல்வி அதிகாரியாக உயர்வு பெற்று 1990ஆம் ஆண்டு வரை பல்வேறு மட்டங்களிலும் பணியாற்றிய பின்னரும் அவரது பணி கடல் கடந்தும் வியாபித்தது.
அல் - குர்ஆன், அல் - ஹதீஸ் பற்றி அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. தென்னிந்தியாவில், தமிழகத்தில் திருச்சியில் அவர் ஒரு அறக்கட்டளையை நிறுவியதோடு, அரபுக் கலாசாலையையும் நிறுவி பலதரப்பட்ட விதத்தில் சன்மார்க்க அறிவை போதிப்பதிலும், மெஞ்ஞான அறிவை வளர்ப்பதிலும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்.
ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் மிக்க மௌலானா கலீல் அவ்ன் தமிழில் சிறு காவியங்களையும், பிரபந்தங்களையும் மகானந்த லங்காரம் என்ற சித்திரக் கவிதையும் கூட இயற்றி யிருப்பதாக அறிந்துள்ளேன்.
அவரைப் பற்றி பல்வேறு இஸ்லாமிய, தமிழ் அறிஞர்கள் புகழாரம் சூடியிருக்கிறார்கள். இந்தியாவின் மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே .அப்துல் கலாம் மௌலானா கலீல் அவ்ன் உடைய மொழித் திறமை, சன்மார்க்க ஈடுபாடு என்பன பற்றி விதந்துரைத்திருப்பதோடு, அகிலன் போன்ற தமிழக எழுத்தாளர்களும் கூட அவரைப் பற்றி புகழ்ந்திருக்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நெடுகிலும் அன்னாருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார்.
வெளிநாட்டில் மாநாடொன்றில் கலந்து கொண்டிருப்பதன் காரணமாக, ஜனாஸா நல்லடக்கத்தில் வந்து கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவர் சார்ந்த சன்மார்க்க வழிமுறையை அனுசரிப்போருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, மௌலானாவுக்குமேலான ஜன்னத்துல் பிர்தௌசுல் அஃலா என்ற சுவன வாழ்வு கிட்ட வேண்டுமென்றும் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)