
posted 30th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடுமாறு வேண்டுகோள்
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் குறுக்குத் தெருக்களுக்கும் பெயர்ப் பலகைகளை நிறுவுமாறு சாய்ந்தமருது கல்வி, சமூக, கலாசார அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
மன்றத்தின் தவிசாளர் ஏ.எல்.எம். முக்தார் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;
இப்பிரதேசங்களில் நீண்ட காலங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த வீதிப் பெயர்ப் பலகைகள் சேதமடைந்தும் அழிவடைந்தும் காணப்படுவதுடன் சில வீதிகளின் பெயர்ப் பலகைகள் இருந்த இடமும் இல்லாமல் போயுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன்னர் இப்பிரதேசங்களில் உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான சில பெரிய வீதிகளுக்கு மாத்திரம் பெயர்ப் பலகைகள் இடப்பட்டுள்ளன. எனினும் மாநகர சபைக்கு சொந்தமான வீதிகளுக்கு இன்னும் பெயர்ப் பலகைகள் அமைக்கப்படவில்லை. சில வீதிகளுக்கு பொருத்தமான பெயர்கள் கூட சூட்டப்படாமல் இருந்து வருகின்றன.
இவ்வாறு பெரும்பாலான வீதிகளுக்கு பெயர்ப் பலகை இல்லாமல் அநாதரவற்று இருப்பதன் காரணமாக வெளியிடங்களில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் மாத்திரமல்லாமல் உள்ளூர் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொது மக்கள் தமது வசிப்பிடத்தை அடையாளப்படுத்துவதற்கு வீதியின் பெயரையே குறிப்பிட்டுக் கூறுவர். ஆனால், ஏனையோர் அதனை புரிந்து கொள்வதற்கு, குறித்த வீதியின் பெயரை அறிந்திருக்க வேண்டும். அதனை அவ்வீதியின் பெயர்ப் பலகையைக் கொண்டே அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.
ஆகையினால் இனியும் காலம் தாமதிக்காமல் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ஒழுங்கைகளுக்கும் பெயர்ப் பலகைகளை நிறுவுவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)