
posted 1st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பேரம் பேசலாம் என்பது ஏமாற்றும் கருத்தாகும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக இறக்கி, வெற்றி பெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரிடம் பேரம் பேசலாம் என்ற மனோ கணேசனின் கருத்து தேர்தல் சட்டங்களுக்கு முரண் என்பதுடன் தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்தாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒன்றின் செவ்வியில் மனோ கணேசன் எம்.பி. பேசும் போது இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசலாம் என தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கு தேர்தல் அரசியல் சரியாக தெரியாது என்பது தெளிவாகிறது. இப்படித்தான் ஹிஸ்புள்ளாவும் விசயம் புரியாமல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வீண் செலவுகளை செய்தார்.
ஜனாதிபதி தேர்தலின் பின் ஒரு வேட்பாளரின் வாக்கு சீட்டிலுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளை வைத்து எந்த வேட்பாளரிடமும் பேரம்பேச முடியாது என்பதே உண்மை.
இரண்டாவது விருப்பு வாக்கு எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இரண்டாவது விருப்பு வாக்குகள் எந்த வேட்பாளரின் வாக்கு சீட்டிலிருந்து கிடைத்தது, எவ்வளவு கிடைத்தது என்பதை தேர்தல் திணைக்களம் பிரித்தறிந்து பகிரங்கமாக அறிவிக்காது என்பதை மனோ தெரிந்து கொள்ள வேண்டும்.
விருப்பு வாக்கு தேர்தல் முறைப்படியான பாராளுமன்ற தேர்தலிலும் ஒருவர் தனது வாக்கு சீட்டில் உள்ள மற்றவருக்கான விருப்பு வாக்கை பேரம் பேச முடியாது.
தேர்தலுக்கு முன் ஒரு வேட்பாளரிடம் ஒப்பந்தம் செய்து அந்த வேட்பாளருக்கு மக்கள் நேரடியாகவே வாக்கு செலுத்த வைக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்களித்ததன் பின் அவரது வாக்குசீட்டில் உள்ள இரண்டாவது விருப்புவாக்கை இன்னொரு வேட்பாளருக்கு செலுத்துங்கள் என்று சொல்ல அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் பகிரங்கமாக பிரச்சாரமும் செய்யவும் முடியாது, அதேபோன்று தனது வாக்கு சீட்டிலுள்ள இரண்டாவது விருப்பு வாக்கை தனது அனுமதியில்லாமல் எண்ணவும் கூடாது, யாருக்கும் வழங்கவும் கூடாது என்றும் தேர்தல் திணைக்களத்துக்கு கட்டளையிடவும் முடியாது என்பதெல்லாம் தெரியாத ஒருவராக மனோ கணேசன் இருப்பது தமிழ் பேசும் அரசியலுக்கு கேவலமாகும்.
ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு இன்னொரு வாக்கை மற்றுமொரு வேட்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தால் முதல் வாக்கு பெற்றவருக்கு 50 வீதம் கிடைக்காத போது இரண்டாவது தேர்வில் அவருக்கு விருப்பு வாக்கு இருந்தால் அது முதல் வேட்பாளருக்குரிய வாக்கு என்பதால் அதுவும் அவருக்கு சேர்க்கப்படும். இதில் எத்தகைய பேரம் பேசலும் முடியாது, இதற்கு யாரும் தடை போடவும் முடியாது.
அதனை பார்ப்பது தேர்தல் திணைக்களத்தின் வேலையாகும். அதனை எடுக்கவா இல்லையா என்றெல்லாம் கூட தேர்தல் திணைக்களம் யாரிடமும் கேட்காது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் வேட்பாளராக இறங்கி தனக்கான வாக்குப்பலத்தை காட்ட முடியுமே தவிர பேரம் பேசுதல் என்பது இங்கு இல்லை என்பதே உண்மை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)