
posted 2nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர்கள் பாராட்டு
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையினால் 2023ஆம் ஆண்டில் சாதனையாளர்களை பாராட்டும் விழா பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
வலயக்கல்வி பணிப்பாளர் சீ. சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் கலந்து கொண்டார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எழுபது பாடசாலைகளில் கல்வி கற்று பொதுப்பரீட்சைகளில் சாதனை மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், கற்றல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னால் மட்டக்களப்பு தலைவர் சி. வசந்தராசா, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆ. பார்த்தீபன், ஆசிரியர்கள் என பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)