தமிழ்ப்பொது வேட்பாளருக்கான நியாயங்களை வழங்கிய ஜனாதிபதி - யோதிலிங்கம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ்ப்பொது வேட்பாளருக்கான நியாயங்களை வழங்கிய ஜனாதிபதி - யோதிலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நான்கு நாள் வடக்கு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியிருக்கின்றார். இந்த மாதம் 4ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கில் தங்கி நின்று பல்வேறு சந்திப்புக்களையும் மேற்கொண்ட பின் சென்றிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு, யாழ் இளைஞர்களுடன் சந்திப்பு, சர்வமதத் தலைவர்களுடன் சந்திப்பு, பல்கலைக்கழக் கல்வி அலுவர்களுடன் சந்திப்பு விவசாய மீனவர்களுடன் சந்திப்பு எனப் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சியின் வடக்கு மாகாண ஆதரவாளர்களையும் விஐயகலா மகேஸ்வரனின் ஒழுங்கமைப்பின் கீழ் சந்தித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் பயணம் தொடர்பில் அவரிடம் மூன்று இலக்குகள் இருந்திருக்கின்றன. அதில் முதலாவது தமிழ் மக்களுடன் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கின்றேன் என சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதாகும். சர்வதேச சமூகம் தமிழ் மக்களுடன் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. சர்வதேச நாணய நிதியமும் இதனை மறைமுகமாக வலியுறுத்தி வந்தது. தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு முழுமையான தீர்வைக்கண்டு விட முடியாது என்பது சர்வதேச சமூகத்திற்கும் தெரியும். ஜனாதிபதிக்கும் தெரியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையில் இன்று ஜனாதிபதி இல்லை. அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கின்ற போதும் இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கின்ற அதிகாரம் படையினரிடமேயுண்டு. நீதிமன்றங்களின் கட்டளைகளை மீறி குருந்தூர்மலை விவகாரத்தில் படையினர் நடந்து கொண்டனர். அதே போல மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திலும் ஜனாதிபதியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்த படையினர் முன்வரவில்லை.

ஜனாதிபதியும் தன்னுடைய இருப்புக்கு படைகளிலேயே தங்கியிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்சாவை படையினர் கைவிட்டதனாலேயே பதவியை விட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலை தனக்கு வரக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிகக் கவனமாக இருக்கின்றார். மறுபக்கத்தில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாப்பவராகவும் ஜனாதிபதியே இருக்கின்றார். இவ்வாறு படையினரும் ஜனாதிபதியும் பரஸ்பரம் ஒரு தரப்பில் மற்றைய தரப்பு தங்கியிருப்பதனால் தங்களுக்கிடையே முரண்பாடுகள் வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர்.

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் தனக்குரிய ஆதரவு எவ்வாறு இருக்கின்றது என்பதை நாடி பிடிப்பதாகும். ஜனாதிபதித்தேர்தலில் இந்தத் தடவை 2015ஆம் ஆண்டுத் தேர்தலைப் போல தமிழ் மக்களுடைய வாக்குகளே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதாக அமையும். எனவே, தமிழ் மக்களுடைய ஆதரவை நாடி பிடித்துப்பார்க்க விரும்பியிருக்கின்றார். தான் வெல்லக்கூடிய நிலையில் உறுதியாக இருந்தால் தான் ஜனாதிபதித் தேர்தலை அவர் நடாத்துவார். அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி தேர்தலைப் பிற்போடவே முயற்சிப்பார். இது விடயத்தில் யாப்பு ஏற்பாடுகளை அவர் கணக்கெடுக்கப்போவதில்லை.
தற்போது அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் விக்கிரமசிங்காவையும், சஜித்பிரேமதாசாவையும் ஐக்கியப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகவும், சஜித்பிரேமதாசாவை பிரதமராகவும் கொண்டு வருவதற்கு அவை முயற்சிக்கின்றன. இந்தியா இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படலாம் என்ற கருத்தும் இந்தியாவிடம் உண்டு. பல விடயங்களில் ரணில்விக்கிரமசிங்க இந்தியாவையும் ஏமாற்றி வருவதால் அவர் பற்றி நல்லவிப்பிராயம் இந்தியாவிடம் பெரிதாக இல்லை. அமெரிக்காவுக்கு தங்களது இந்தோ - பசுபிக் மூலோபாய திட்டமும் அதன் அடிப்படையிலான சர்வதேச நாணய நிதியத்தின் நகர்வுகளும் மிகவும் முக்கியமாக இருப்பதால் ரணிலைத் தவிர வேறு நபர்களிடம் அதிகாரம் செல்வதை அது விரும்பவில்லை.

இந்த எதிர்பார்ப்பையே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்வீரசேகராவும் பொருளாதார கண்ணோட்டத்தில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார மறுசீரமைப்புக்கள் பத்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். இதன் அர்த்தம் பத்து வருடங்களுக்கு ஆட்சி அதிகாரம் மாறக்கூடாது என்பதே.

தமிழ்ப்பிரதேசங்களில் தனக்கு ஆதரவு கிடைக்காதுவிட்டால் தமிழ் பொது வேட்பாளரை ரணில் விரும்பக்கூடும். லைக்கா நிறுவனத்தலைவர் சுபாஸ்கரன் தமிழ் வேட்பாளராக நிற்கப் போகிறார் என்ற செய்தியும் வலைத்தளங்களில் அடிபடுகின்றது. இது ரணிலின் ஏற்பாடு என்றும் கூறப்படுகின்றது. தமிழர்களது வாக்குகள் சஜித்பிரேமதாசாவுக்கு செல்வதைத் தடுப்பதற்காக ரணிலால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்றும் பேசப்படுகின்றது. இதில் ரணிலுக்குள்ள பிரச்சினை சுமந்திரன் அணி சஜித்பிரேமதாசாவை ஆதரிப்பதே.
தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதால் இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். எனினும் தமிழ் மக்கள் இதனைப் பொருட்டாக எடுக்கத்தேவையில்லை. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதான கடமை தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்கள் ஆணை மூலம் கூட்டாக வெளிப்படுத்துவதே! ரணில் வந்தாலென்ன சஜித் வந்தாலென்ன! தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

ரணிலின் மூன்றாவது இலக்கு புலம்பெயர்தமிழ் மக்களின் முதலீடுகளை வர வைப்பதே! தமிழ்ப்பிரதேசங்களில் அபிவிருத்தியை அரசாங்கத்தின் நிதி வழங்கல் மூலம் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடிப்பது தான் அவரது நோக்கம். அபிவிருத்தியை செய்வதற்கு 13வது திருத்தம் போதும் எனக்கூறுகின்றார். இதற்குப்பின்னால் இந்தியாவை திருப்திப்படுத்தும் நோக்கம் இருக்கலாம். 13வது திருத்தத்தின்படி மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநரிடம் இருக்கின்றதே ஒழிய மாகாண சபையிடமோ, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவையிடமோ இல்லை. அபிவிருத்தி தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் மாகாண சபைகளுக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் ஆளுநரின் சம்மதம் அவசியம். இந்த சீத்துவத்தில் அபிவிருத்திக்கான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு எப்படிக் கிடைக்கும்?
தவிர மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தும் எந்த உத்தரவாதத்தையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தாலே தவிர மாகாண சபைத்தேர்தலை நடத்த முடியாது. திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கவில்லை. அதற்கான விருப்பத்தையும் காட்டவில்லை. சபைகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குதல் என்ற விக்கினேஸ்வரனுடன் மேற்கொள்ளப்பட்ட யோசனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விக்கினேஸ்வரன் இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை எனக்கூறி சந்திப்பையே புறக்கணித்திருக்கின்றார்.

ஜனாதிபதி வடக்குக்கு வருகை தந்த போது தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினையான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விவகாரம், ஆக்கிரமிப்பு விவகாரம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் விவகாரம், காணிப்பறிப்பு என்பனவற்றில் கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படக்கூடிய செய்திகளை தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கள் தோல்வியிலேயே முடிந்தன. ஆக்கிரமிப்புகள் பற்றி ஜனாதிபதி வாயே திறக்கவில்லை போதாக்குறைக்கு நல்லூர் நிர்வாகம் சம்மதித்தால் கோவிலை பெரிதாக்க தயார் எனக் கூறியிருக்கின்றார். இல்லை என்றால் கூட யாழ்ப்பாணத்தில் பெரிய இந்துக் கோயிலை கட்டத்தயார் எனக் கூறியிருக்கின்றார். இங்கே வடக்கே இருக்கின்ற கோவில்களை பௌத்த ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதியின் புதிய கோயில் உருவாக்கம் பற்றி மகிழ்ச்சிப்பட என்ன இருக்கின்றது.

ஜனாதிபதியின் பயணத்தின் போது அரசாங்கதரப்பில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவும், அங்கையன் இராமநாதனும், விஜயகலா மகேஸ்வரனும் தங்களது செல்வாக்கைக் காட்ட முயற்சித்திருக்கின்றனர். அண்மைக்காலமாக ஜனாதிபதி டக்ளஸ் தேவானந்தா பக்கமே சற்று சாய்ந்து வருகின்றார். உறுதியான வாக்கு வங்கி டக்ளஸ்தேவானந்தாவுக்கு இருக்கின்றது என அவர் கருதியிருக்கலாம். இது விடயத்தில் தனக்கும் செல்வாக்கு இருக்கின்றது எனக் காட்டுவதற்காக விஜயகலா மகேஸ்வரன் 600 பேரை கூட்டிவந்து ஜனாதிபதியை சந்திக்க வைத்திருக்கின்றார். இந்த சனக்கூட்டத்தைப் பார்த்து ஜனாதிபதியே ஆச்சரியப்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதியின் பயணத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானவர் கில்மிசா தான். தனது மாமன் கொலை செய்யப்பட்டதை கண்ணீர்மல்க சென்னையில் தெரிவித்து உலகத் தமிழர்களின் ஆதரவை பெற்றிருந்தவர் கில்மிசா. ஜனாதிபதியின் சந்திப்பின் போது செல்பி புகைப்படம் எடுத்து அனைத்தையுமே அவர் கவிழ்த்துக் கொட்டியிருக்கின்றார். இந்த விவகாரத்தில் அவருக்கு சரியான வழிகாட்டல்கள் கிடைக்கவில்லை. ஜனாதிபதி சந்திப்பதற்கு கேட்டால் செல்வது தவிர்க்க முடியாதது எனினும் வலிந்து சந்திப்பதை தவிர்த்திருக்கலாம்.
சமயத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் ஆறுதிருமுருகனும் நல்லை ஆதீன சுவாமிகளும் அழைப்பை புறக்கணித்துள்ளனர். நல்லை ஆதீன சுவாமிகள் தாங்கள் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. எனவே இந்தத் தடவை சந்திப்பை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறியிருக்கின்றனர். மறவன்புலவு சச்சிதானந்தம் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும் என சந்திப்பில் ஜனாதிபதியிடம் வேண்டியிருக்கின்றார். அவருக்கு தற்போது தலைபோகின்ற பிரச்சினை மத மாற்றம் தான். தமிழ்த்தேசத்தை உடைத்தே தீருவது என அவர் தீர்மானித்து விட்டார் போலவே தெரிகின்றது.

ஜனாதிபதியின் பயணம் தொடர்பான எதிர்வினைகள் பலவீனமாகவே இருந்தன. ஒருங்கிணைவு அங்கிருக்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சந்திப்பை புறக்கணித்ததோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடாத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் சிறு எண்ணிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட அடையாளப் போராட்டம் தான். அடையாளப் போராட்டத்திற்கப்பால் தங்களை வளர்த்துக் கொள்ள முன்னணி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. சிவில் முகம் என்ற வகையில் வேலன் சுவாமிகள் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றார்.

முன்னணிக்கு புறம்பாக காணாமல் போனோரின் உறவுகள் கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் போராட்டங்களை நடாத்தியிருந்தன. வவுனியாவில் அதன் தலைவி சி. ஜெனிற்றாவும் காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சாள்ஸ் நயஸ் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இக் கைதுக்கான எதிர்ப்புகளும் போதியளவிற்கு காட்டப்படவில்லை. அரசியல் கட்சிகள் அறிக்கைகளுடன் மட்டும் நின்று கொண்டன.

இந்தப் பயணத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளின் நடத்தைகள் சகிக்க முடியாதவையாக இருந்தன. அனைத்து கட்சிகளும் கூட்டாக தீர்மானம் எடுத்து சந்திப்பை புறக்கணித்திருக்க வேண்டும். ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு வாருங்கள் என கோரிக்கையினை வைத்திருக்க வேண்டும். இங்கே கட்சிகள் தன்னிச்சையாகவே நடந்து கொண்டன. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஒருங்கிபை;பு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கூட முறையாக கோரிக்கைகள் எவற்றையும் அவர்கள் முன்வைக்கவில்லை. ஆளும் கட்சியினருக்கும் சோடை போகாத வகையில் எடுபிடிகளாகவே நடந்து கொண்டனர். கட்சிகளின் நடத்தைகளோடு ஒப்பிடும் போது ஆறுதிருமுருகனையும், நல்லை ஆதீன சுவாமிகளையும் நாம் பாராட்டியேயாக வேண்டும்.

மொத்தத்தில் ரணில்விக்கிரமசிங்க தனது வடக்கு பயணத்தின் மூலம் தமிழ் பொது வேட்பாளருக்கான நியாயங்களை வழங்கியிருக்கின்றார் என்றெ கூறலாம். தமிழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு யாராவது இதை உரக்க தெளிவுபடுத்துவது நல்லது.

தமிழ்ப்பொது வேட்பாளருக்கான நியாயங்களை வழங்கிய ஜனாதிபதி - யோதிலிங்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)