
posted 21st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 72 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் அக்கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 187 வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு எம்.ஏ.சுமந்திரன் 136 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கூட்டத்தின் ஆரம்பத்தில் சீ. யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் புதிய தலைவர் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில் எமது மக்களின் உரிமைக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் பொறுப்போடும் கடமையோடும் செயற்படுவேன் எனவும் கட்சி வரலாற்றில் இத்தெரிவு தேர்தல் மூலம் இடம்பெற்றமை முக்கிய அத்தியாயமாகும் என்றார்.
தலைவர் தெரிவிற்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில் இந்த தேர்தல் மூலம் உட்கட்சி ஜனநாயகம் வெளிக்கொனரப்பட்டுள்ளது. நண்பர் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை முன்னாள் தலைவர் மாவை சேனாதிபதி ராஜா அவர்களின் தலைமையில் வழிநடாத்தி வந்த இந்த பயணத்தில் தொடர்ந்தும் நாம் ஒன்றாகவே பயணிப்போம் என்று கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)