
posted 11th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜனாஸா எரிப்பை நிறுத்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் உதவினார்
கொவிட்-19 தொற்று பரவி இருந்த காலத்தில் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதனை நிறுத்துவதற்கு அப்போதைய பாகிஸ்தானிய பிரதமர் உதவியதை இலங்கை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
இலங்கையில் தமது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு விடைபெற்றுச் செல்லும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ .எம். ஜவ்பரின் ஏற்பாட்டில், முஸ்லிம் ஹேண்ட் அமைப்பின் இலங்கை வதிவிட பிரதிநிதி ஏ.எம். மிஹ்லாரின் ஒத்துழைப்புடன் கொழும்பு சினமண்ட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இராப்போசனத்துடனான பிரியாவிடை நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையை பொறுத்தவரை, பொருளாதார மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு தாராளமாக உதவி வந்திருக்கின்றது. இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக அது இருந்து வருகின்றது. கஷ்டமான நிலைமைகளில் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்திருக்கின்றது.
கொவிட்-19 நோய் தொற்றினால் இறந்தவர்களை எரிக்கவும் அல்லது அடக்கம் செய்யவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியிருந்த நிலைமையிலும், அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து வந்த நிலையில், அப்பொழுது இலங்கைக்கு விஜயம்செய்த பாகிஸ்தானின் பிரதமர் இந்நாட்டு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதன் பயனாகவே முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்து வந்திருக்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாகிஸ்தான் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவி இருக்கின்றது.
எங்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் அந்நாட்டின் தூதுவர் நேரடியாகவே கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து உதவிகளை செய்து வந்திருக்கிறார். அவர் எங்களை விட்டும் பிரியாவிடை பெற்று செல்லுகின்ற போதிலும் கூட, அவர் மீண்டும் நாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம்.
இவ்வாறான பெரிய பிரியாவிடை நிகழ்வொன்றில் ஏனைய நாடுகள் பற்றி கருத்துக்களை கூறுவது பொருத்தமானதல்ல. ஆயினும், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் உதவியுடன் அப்பாவி மக்களை படுகொலை செய்கின்ற போதும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றபோதும் சில நாடுகள் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் கூட, அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர் என்றார்
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், சுற்றுலாத்துறை, காணி அமைச்சின் செயலாளர் புவனேக ஹேரத் இலங்கை சுற்றுலா ஊக்கிவிப்பு சபை தலைவர் சாலக கஜபாகு அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமல குணரட்ன, இலங்கை கன்வென்ஷன் பீரோ தலைவர் திசு ஜெயசூரிய மற்றும் பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)