
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கில் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர்களாக உள்ளீர்க்க தீர்மானம் கல்வி அமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கை முன்வைத்தால் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம். பி. ரோஹிணி குமாரி கவிரத்ன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ 2014 ஆம் ஆண்டு கிழக்கில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளும் வகையில் தகைமையுடைய ஆசிரிய உதவியாளர்கள் அதற்காக நியமிக்கப்பட்டார்கள்.
அவர்கள் ஆசிரிய பயிற்சிகளை கோரியுள்ளபோதும் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு சென்றால் வகுப்பறைகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமற் போவர் என்பதால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு அவ்வாறு இணைத்து கொள்ளப்பட்டவர்கள். கடந்த 10 வருடங்களாக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை.
தற்போது மத்திய மாகாணத்தில் இவ்வாறு ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்களும் அவ்வாறு தம்மை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு எத்தகைய நடவடிக்கை எடுக்கவுள்ளது” என்று ரோஹிணி குமாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த, இந்த விடயம் தொடர்பில் அவர்கள் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை முன்வைத்தால் ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கல்விமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)