எம்முடன் சேர்ந்து பயணிக்க தமிழ் அரசு முன்வரவேண்டும்

எம்முடன் சேர்ந்து பயணிக்க தமிழ் அரசு முன்வரவேண்டும்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் இணைந்து பயணிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி முன்வரவேண்டும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று முன்தினம் (26) வெள்ளி வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

புதிய தலைவராகப் பதவியேற்ற பின்னர் சிவஞானம் சிறீதரன் ஐக்கியத்தை பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதப் போராளிகளாக செயல்பட்டவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் செயல்பட்டு வந்தார்கள்.

சம்பந்தனால் தலைமையேற்று நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அதில் இணைந்திருந்த பல கட்சிகள் - தனிநபர்கள் வெளியேறினர். அதுமாத்திரமல்லாமல், இறுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 வருட காலமாக தமிழ் மக்களுக்காகப் போராடும் ஓர் அரசியல் கட்சியாக தன்னை நிறுவனப்படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் தமிழ் அரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயல்படுவதுமே இன்றுவரை தொடர்கின்றது. இதன் காரணமாகவே இடைப்பட்ட காலங்களில் பல கட்சிகளும் அதிலிருந்து வெளியேறின.

இந்த நிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் தமிழ் அரசுக் கட்சியும், தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றுள்ளது.

எம்முடன் சேர்ந்து பயணிக்க தமிழ் அரசு முன்வரவேண்டும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)