
posted 26th January 2024

பவதாரணியின் இழப்பால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் தேனாரத்தின் அனுதாபங்கள்
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இசைஞானி இளையராஜாவின் மகள் கொழும்பில் காலமானார்
புற்றுநோய்க்கு சிகிக்சை பெறுவதற்காக கொழும்பு வந்த பிரபல தென்னிந்திய பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரணி (வயது 47) நேற்று மாலை மாரடைப்பால் காலமானார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் அங்கு உயிரிழந்தார்.
பவதாரணி 2000ஆம் ஆண்டு வெளியான 'பாரதி' படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’என்ற பாடலுக்கு இந்திய தேசிய விருதைப் பெற்றிருந்தார். இவர், 1984இல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆயுள்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை வந்திருந்த நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதேவேளை, இசைஞானி இளையராஜா கொழும்பில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று முன்தினம் வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)