
posted 2nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ரணில் வடக்குக்கு வருவது தேர்தல் பிரசார நோக்கமே
தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு வருகிறார் என்று இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பானது பொருளாதார இக்கட்டுநிலையிலுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால், மக்கள் அரசுக்கு கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
மக்களுக்கு வருமானம் இல்லை; மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 'அறகலய' போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும். சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது.
தேர்தல் பிரசாரத்துக்கான ஆயத்தமாகவே ஜனாதிபதி வடக்கு வருகை உள்ளது. பிரச்சினையை பாராளுமன்றத்திலேதான் தீர்க்க முடியும் என்கிறார். கட்டடம் கட்டித் தருகிறேன், கைத்தொழில் பேட்டை அமைக்கிறேன் என்று மாத்திரம் சொல்வற்காக வருகிறார்.
வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய பணத்துக்கு ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடுதான் அவர் வடக்குக்கு வருகிறார் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)