
posted 5th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். வந்த ஜனாதிபதிக்கு எதிராக கச்சேரியின் முன்பாக போராட்டம்
ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் நேற்று (4) கைது செய்யப்பட்டனர்.
வடக்குக்கு நான்கு நாள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) யாழ்ப்பாணம் வந்தார். உலங்கு வானூர்தி மூலம் (ஹெலி) யாழ்ப்பாணம் வந்த அவர், மாவட்ட செயலகத்துக்கு மாலை 4.10 மணியளவில் வருகை தந்தார்.
இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்கள், கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தசமயம், யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் போராட்டக்காரர்களை தடுத்திருந்தனர்.
இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொன் மாஸ்டர், தமிழ்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)