
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்.மாவட்டத்தில் ஆரம்பமான விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்
யாழ். மாவட்டத்தில் இன்று (18) வியாழக்கிழமை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த வேலை திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திருநெல்வேலி, கொக்குவில், யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அதிகளவானோர் கடந்த இரண்டரை மாதங்களுக்குள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
ஆகவே இது ஒரு முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கடந்த டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் 2800 பேருக்கு மேற்பட்டவர்கள் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்துக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
பொதுமக்கள் தங்களுடைய வீட்டுப் பகுதி, சுற்றுப் பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை இல்லாது ஒழிக்க வேண்டும்.
இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
இன்று காலை 8.30 மணி முதல் கொக்குவில் கிழக்கு பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் 20 குழுக்களாக இந்த பணியை ஆரம்பித்துள்ளோம்.
இந்த வேலை திட்டத்தில் அந்தந்த கிராமங்களில் இருக்கின்ற பொதுமக்கள் சார் அமைப்புகள் இணைந்துள்ளளார்கள் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)