
posted 27th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மன்னார் தீவை பாதுகாக்குமாறு வலியுறுத்தி போராட்டம்
மன்னாரில் இடம்பெற்று வருகின்ற சுற்றுச்சூழலை அழிக்கும் சட்ட விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்கள் நலமாக வாழ நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பவற்றை வலியுறுத்தி மன்னாரில் நேற்று (26) வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அத்தோடு, மன்னாரில் இடம்பெற்று வரும் பாரிய களிமண் அகழ்வு மற்றும் உயர்மின்வலு காற்றாடிகள் அமைக்கும் திட்டங்கள் காரணமாக மன்னார் தீவு மக்களது இருப்பில் பிரச்சினை, வாழ்வாதார பாதிப்பு, சட்டவிரோத காணி அபகரிப்பு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போவதாகவும் இதன்போது போராட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர்.
மன்னார் பிரதான பாலத்தில் தொடங்கிய இந்த போராட்டம், சில மணிநேரங்கள் மாவட்ட செயலகத்தின் முன்னாலும் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்:
- 'மனித உயிர்களை காவு கொள்ளுகின்ற மண் அகழ்வு, காற்றாலை நடவடிக்கைக்கு காணிகளை விற்காதே'
- 'மண் அகழ்வை நிறுத்தாவிடில் நன்னீர் மாசடைவதுடன் உப்புத் தன்மையும் அதிகரிக்கும்'
- 'மன்னாரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம்' > 'கனியவள மண் அகழ்வு மன்னார் மக்களின் வாழ்வாரத்தை அழித்துவிடும்'
போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடக்கு தெற்கு முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வடக்கு, தெற்கு முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலர் உரையாற்றினர்.
அதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சென்ற போராட்டக்காரர்கள், அங்கு மன்னார் மேலதிக அரசாங்க அதிபரிடம் (காணி) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு மகஜர் ஒன்றை கையளித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)