
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மகிந்தவுடன் இணைய தமிழர் தயாராக இல்லை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - பட்டிருப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த கூறியிருக்கின்றார்.
ஆயுதப்போராட்டம் 2009இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.
2009இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மகிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் எனக் கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.
மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.
அதல பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜன பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜன பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.
யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)