
posted 9th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அமரர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நினைவும் கவனயீர்ப்பு போராட்டமும்
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை (08) மட்டக்களப்பு நகர்ப் பகுதியிலுள்ள காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செயய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா. கிருஷ்ணகுமார் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தின.
இதன்போது நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த அமரர் லசந்த விக்கிரமமதுங்கவின் உருவப் படத்திற்கு வணபிதா ஜீவராஜ் மற்றும் விரிவுரையாளர் எஸ். பெர்ணாண்டோ ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர். அத்தோடு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து,
> “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”
- “சர்வதேச விசாரணை வேண்டும்”
- “அடக்காதே அடக்காதே ஊடகங்களை அடக்காதே”
போன்ற வாசகங்களை கோஷங்களாக விண்ணதிர எழுப்பினர்.
இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)