வீதி விபத்துகளை தடுக்க நடவடிக்கை

வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துகளை தடுப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் தூரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பல இடங்களிலும் வீதி விபத்துகள் இடம்பெற்று வருகிறது. எனினும், இந்த விபத்துகள் தொடர்பில் யாரும் கவனிப்பதாக இல்லை. இந்த விபத்துக்களில் வடக்கு மாகாணம் முன்னிலையில் காணப்படுகிறது.

துயர் பகிர்வோம்

இதனை தடுப்பதற்கோ அல்லது மாற்று வழிகள் தொடர்பில் சிந்திப்பது தொடர்பிலும் கவனம் இல்லை. விபத்துகள் நடைபெற்றால் மட்டும் அதுபற்றி கதைக்கிறார்கள். பின்னர் மறந்து விடுகிறார்கள். இவ்வாறு இருக்க முடியாது. உயிர்கள் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

தற்போதைய சூழலில் வடக்கிற்கான ரயில் சேவை புனரமைப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் பேருந்துகளின் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் அதிகமான பேருந்துகள் போக்குவரத்து செய்யும்போது போட்டி ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகளும் அதிகரிக்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார் சாதாரணமாக மோட்டார் சைக்கிளை பரிசோதிப்பதை மாத்திரம் செய்யாது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் வாகனங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

இ.போ.ச. பேருந்துகள் உட்பட அனைத்து வண்டிகளையும் சோதனை செய்யவேண்டும். சாரதி அனுமதி பத்திரங்கள் மட்டுமன்றி போக்குவரத்திற்கு ஏற்ப வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பதையும் சோதனை செய்ய வேண்டும்.

தூர போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் ஒருசில இடங்களில் நிறுத்தி ஆலய வழிபாடுகள், உணவு உண்பதற்கான நேரங்கள், மலசல பயன்பாடுகளுக்கென நேரங்களை ஒதுக்கி சற்றுநேர ஓய்வு எடுத்து செல்வதற்கான ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் துறைசார்ந்த அதிகாரிகள், பொலிஸார் ஈடுபட வேண்டும்.

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற விபத்துக்களால் தேவையற்ற உயிரிழப்புகள், உடல் அங்கவீனங்கள் ஏற்பட்டுள்ளது. ஒன்றுமே அறியாத சிறுவனுக்கு கையை அகற்றி வாழ்நாள் மீளுவதுமே அங்கவீனமுடைய சிறுவனாக மாறியுள்ளான். இந்த நிலை ஏன் எற்பட வேண்டும்? யார் இதைபற்றி சிந்திப்பது?

போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து சாரதிகளும், நடத்துநர்களும் தங்கள் கடமைகளை, பொறுப்புக்களை உணர்ந்து சேவையாற்ற வேண்டும். இதற்கான அதிகாரிகள் பொலிஸார் தமது கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதை சமய தலைவனாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வீதி விபத்துகளை தடுக்க நடவடிக்கை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)