
posted 3rd January 2023
“குறைவான வளங்களைக் கொண்ட நிறைவான மக்கள் சேவைகளை வினைத்திறனுடன் அரச உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டும். இதனிமித்தமே சேவைகள் பட்டயம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது”
இவ்வாறு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் கூறினார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதிய வருட கடமை பொறுப்பேற்பு அரச சேவை உறுதியுரை (சத்தியப்பிரமாணம்) நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக சகல, உத்தியோகத்ர்கள், ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கென இரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்பட்ட பின்னர் சகலரும் அரச சேவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நிகழ்வில் உதவி பிதேச செயலளார் ரி. ஜெஸான், நிருவாக உத்தியோகர்தர் எம்.பி. சரீன், கணக்காளர் சாஜிதா பர்வீன், நிதி உதவியாளர் எம்.வை.எம். நஜீப், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர், சிரேஷ்ட கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எல். பைரூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கொவிட் பரவலால் நாட்டில் ஏற்பட்ட பெரும்பாதிப்பு மற்றும், பொருளாதாரமந்த நிலை, மற்றும் பல்வேறு பிரச்சினைகளை நாடு எதிர் நோக்கியதால் இன்று மக்களும் பெரும் நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனினும் இத்தகைய நெருக்கடிகள், பிரச்சினைகளிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்டெடுப்பதற்கு இன்று அரசு பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனடிப்படையிலேயே எதிர்வரும் 25 வருடங்களை இலக்காக் கொண்டு காத்திரமான கொள்கைத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கொவிட்டுக்குப் பின்னரான சிந்தனை, பொருளாதார மீட்சி என்பவற்றுக்காக நாட்டு மக்கள் மட்டுமன்றி, அரச உத்தியோகத்தர்களான நாமும் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
குறிப்பாக இன்று வறுமை அதிகரித்துள்ள நிலையில், வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளையும் அனைவரும் முன்னெடுக்க முன்வரவேண்டும்.
இன்று கொழும்பில் குவிந்திருந்த அரச சேவைகளை, மாவட்ட மட்டம், பிரதேச மட்டமென பரவலாக்கம் செய்யப்பட்டு, கிராமங்களில் மறுமலர்ச்சி மையங்களும் உருவாகிவருகின்றன.
எனவே வீண் விரயங்கள், ஊழல்கள் களையப்பட்ட நிலையில் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் வினைத்திறனான சேவை மேம்பட வேண்டும்.
புதிய வருடத்தில் ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும், ஒருமித்தமான மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் “நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு” என்பதை முன்னிறுத்தி நம் பணிகளைத் தொடர்வோம்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)