வாழ்த்திய வலயக்கல்விப் பணிப்பாளர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. உமர் மௌலானா குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.

இம்முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 இல் இப்பாடசாலை மாணவர்கள் 20 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். சென்ற முறையிலும் பார்க்க இம்முறை அதிகமான மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலைக்கும், சம்மாந்துறை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.

மேலும் இம்மாணவர்களின் சிறந்த அடைவிற்காக மிகுந்த அர்பணிப்புடன் அயராது உழைத்த இப்பாடசாலை அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் மற்றும் ஆசிரியர்களான மஜீதா தாசிம், ஏ.எல் நிறோசின், எம்.எச். றிஸ்வி ஜாரியா ஆகியோரை பாராட்டியதோடு எதிர் காலத்தில் இப்பாடசாலை மென்மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் எனவும் வாழ்த்தினார்.

வலயக்கல்விப் பணிப்பாளரின் இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்த்தம்பி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.

மேலும் குறித்த பாடசாலையின் தரம் 5 மாணவர்களை மகிழ்விப்பதற்கு ஏதுவாகவும் அம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 மாணவர் அரங்கம் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது மிகுந்த ஆர்வத்துடனும் ஆனந்ததத்துடனும் தரம் 5 மாணவர்கள் அனைவரும் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரினதும் மேடைக் கூச்சம் போக்கப்பட வேண்டும் என்பதற்காக சகல மாணவர்களும் யாதாயினும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

வாழ்த்திய வலயக்கல்விப் பணிப்பாளர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)