
posted 20th January 2023
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பொது முகாமையாளராக சிங்கள நபர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் 5 சாலைகள் சேவைகளை மட்டுப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டன.
வடபிராந்திய பொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த டிசெம்பர் இறுதியில் ஓய்வு பெற்றார். அவரது வெற்றிடம் இதுவரை நிரப்பப்பாத நிலையில், தற்போது தென்னிலங்கை சிங்கள நபர் ஒருவர் அந்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (20) காலை பதவியேற்கவிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு, காரைநகர், மன்னார் சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா, கிளிநொச்சி சாலைகள் நேற்று (19) வழக்கம் போல இயங்கின. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சாலை தவிர்ந்த ஏனைய 3 சாலைகளில் பாடசாலை போக்குவரத்து இடம்பெற்றது. தூர இடங்களிலிருந்து வந்த பஸ்கள் நேர அட்டவணைப்படி புறப்பட்டன. ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை.
யாழ் சாலையின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இவ் எதிர்ப்புப் போராட்டத்தினால் யாழ். மத்திய பஸ் நிலையமும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)