
posted 25th January 2023
கொவிட்-19 வைரஸ் தொற்றின் போது இலங்கையில் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை இயன்றவரை தடுப்பதில் மறைந்த டாக்டர் ஏ.எல். தஸ்தகீர் பெரிதும் ஒத்துழைத்ததாக அவரது மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமூக சேவையாளரும், கொழும்பு புதுக்கடை வாழைத்தோட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக மருத்துவத்துறையில் ஈடுபட்டுவந்தவருமான நண்பர் டாக்டர் ஏ.எல். தஸ்தகீர் நோய்வாய்பட்டிருந்த நிலையில் காலமானதை அறிந்து ஆழ்ந்த கவலைடைகின்றேன்.
இலங்கையின் வட மாகாணத்தில், மன்னார் பெருநிலப் பரப்பில் ,பெரியமடுவில் பிறந்த மர்ஹூம் டாக்டர் தஸ்தகீர் எமது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் காலத்திலிருந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை குறிப்பாக வன்னி, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மயப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றியதோடு, நீண்டகாலமாக கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான நூர்தீன் மஷூர் உடனும் அவர் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில் பிறப்பு இறப்பு பதிவாளராகவும் அவர் அதிக காலம் சேவையாற்றியுள்ளதோடு, கொவிட்-19 (கொரோனா ) நோய்த் தொற்றினால் மரணமானோரின் ஜனாஸாக்களை எரியூட்டாமல் தடுப்பதிலும் இயன்றவரை ஒத்துழைத்துள்ளார்.

டாக்டர் ஏ.எல். தஸ்தகீர்
சகல சமூகத்தினராலும் நன்கு மதிக்கப்பட்ட அவர் புன்னகை பூத்த முகத்துடன் அனைவருடனும் நளினமாகப் பழகும் இயல்பைக் கொண்டிருந்தார். அத்துடன், தமது பிறந்த மண்ணிலும் வாழ்ந்த மண்ணிலும் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அவர் கூடுதல் கவனஞ் செலுத்தி வந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மஃபிரத்தையும், ஜன்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தையும் வழங்குவதோடு, அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும் அளிப்பானாக.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)