
posted 24th January 2023
நிந்தவூர் ஜெர்மன் நட்புறவு பாடசாலை மாணவர்கள் பொது மக்களை விழிப்பூட்டும் பேரணி ஒன்றை நடத்தினர்.
தமது பாடசாலை அமைந்துள்ள பிரதேச வீதிகளில் இனம் தெரியாதோர் தினமும், தமது வீடுகளில் சேரும் திண்மக்கழிவுகள், குப்பைகளை வீசி விட்டுச் செல்வதால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதுடன், நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன், கட்டாக்காலி நாய்களின் பெருக்கமும் பாடசாலைக்கு வரும் வீதிகளில் அதிகரித்து மாணவர்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கோரியும், குப்பைகள், கழிவுகளை குறித்த சுற்றுப்புற வீதிகளில் வீசாது விழிப்பூட்டவும் மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
பின் தங்கிய பிரதேசத்திலுள்ள இப்பாடசாலை முன்றலிலிருந்து மாணவர்களான சிறார்கள் பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஜெர்மன் நட்புறவு பாடசாலையை வந்தடையும் வீதிகளுடாக கோஷங்களையும் எழுப்பியவாறு மாணவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இதேவேளை, இந்தப்பாடசலை ஆசிரியர்கள், மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ள மேற்படி விடயம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நடவடிக்கையெடுக்க முன்வரவேண்டுமெனவும், குறிப்பாக குப்பைகளை வீசுதல், மற்றும் இதனால் திரளும் கட்டாக்காலி நாய்களையும் ஒழித்துக்கட்ட ஆவன செய்யப்பட வேண்டுமெனவும் பாடசாலை சமூகத்தினர் கோருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)