மலேசியா ஒத்துழைக்கும்

கல்முனைப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு மலேசியாவின் ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படும் என அந்நாட்டின் மலாக்கா மாநில ஆளுநர் கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு, மாநகர முதல்வர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடாத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலாக்கா ஆளுநருடன் மலேசிய பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் அப்துர் ரஸ்ஸாக் பின் இப்றாஹிம், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும்

துயர் பகிர்வோம்

மலேசிய இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், மலேசிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் சிலரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது ஆளுநர் மற்றும் தூதுக் குழுவினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் இரு தரப்பு புரிந்துணர்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

அத்துடன் மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாமின் கல்முனை விஜயத்திற்கு மதிப்பளித்து முதல்வரினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் மாநகர ஆணையாளரினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். இதேவேளை கல்முனை மாநகர முதல்வருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் பரிசு என்பவற்றை வழங்கி, மலாக்கா ஆளுநர் மகிழ்ச்சி பாராட்டினார்.

இங்கு உரையாற்றிய மலாக்கா ஆளுநர்,

பல்லின மக்கள் வாழ்கின்ற கல்முனைப் பிராந்தியத்தின் கல்வி, கலாசார, சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு தம்மால் முடியுமான உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு மலாக்கா மாநிலத்தில் உள்ள முன்னேறிய நகரம் ஒன்றும் கல்முனை மாநகரை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் ஊடாக சகோதர நகரமாக இணைத்து, செயற்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு மேயர் எம்மிடம் முன்வைத்திருக்கின்ற கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

இது சம்பந்தமாக பேசுவதற்கு மேயரை மலாக்காவுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மலேசியா ஒத்துழைக்கும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)