
posted 22nd January 2023
மன்னார் மாவட்டத்தில் 51 கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தபோதும் இவற்றில் 41 கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் ஒரு சுயேட்சைக்குழுவும் , ஒரு கட்சியும் நிராகரிக்கப்பட்டன.
சனிக்கிழமை (21) உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றபின் மாலை 5.30 மணியளவில் இது தொடர்பான ஊடகச் சந்திப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலகருமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் அதிகார சபைகள் தேர்தலுக்கான
ஒரு நகர சபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 51 கட்சிகளும் 03 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.
இவற்றில் 41 கட்சிகளும் 03 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமணு தாக்கல் செய்திருந்தன..
மன்னார் நகர சபைக்காக 10 வேட்புமனுக்களும், மன்னார் பிரதேச சபைக்காக 09 வேட்புமணுக்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்காக 06 வேட்புமனுக்களும், முசலி பிரதேச சபைக்காக 10 வேட்புமனுக்களும், நானாட்டான் பிரதேச சபைக்காக 09 வேட்புமனுக்களும் சமர்பிக்கப்பட்டிருந்தன.
இவற்றில் முசலி பிரதேச சபையைச் சேர்ந்த சுயேட்சைக்குழு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி முழுமையாக நிகாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒரு கட்சியில் ஒரு வேட்பாளார் நிகாரிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இன்னொரு கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் நிகாரிக்கப்பட்டுள்ளார்கள்.
மூன்று சுயேட்சைக் குழுக்களில் ஒரு சுயேட்சைக்குழு நிராகரிக்கப்பட்டமையால் இரண்டு சுயேட்சைக் குழுக்களில் நகர சபைக்கான குழுவுக்கு கால்பந்து சின்னமும், மன்னார் பிரதேச சபைக்கான சுயேட்சைக் குழுவுக்கு சங்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் வேட்புமனுவானது மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றிருந்தது. வேட்புமனுக்கள் சமர்பித்தவர்கள் எங்களுடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாங்கள் வாக்களிப்பு தினமாக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ந் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம் என ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)