மத்திய செயற்குழு கூடுகிறது

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு இம்முறை கிழக்கில் கூட விருக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த களுவாஞ்சிக்குடியில் இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

முக்கியமான காலகட்டத்திலும், அரசியல் சூழ்நிலையிலும் இடம்பெறவிருக்கும் இக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தேனாரம் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

துயர் பகிர்வோம்

குறிப்பாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தை, எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுதல், அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்ட பூர்வ நிலைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட விருப்பதுடன்,

விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உள்ளக சுய நிர்ணயத்துடனான சமஷ்டிக்கட்டமைப்பையே இனப்பிரச்சினைக்கான தீர்வில் வலியுறுத்துவதாகவும் கூறிய தலைவர் மாவை சேனாதிராசா தீர்வு விடயம் குறித்து முஸ்லிம்களுடன் ஏற்கனவே பேசியுள்ளதாகவும், தீர்வு தொடர்பில் முஸ்லிம்களுடன் மீண்டும் கட்டாயம் பேசுவோம் எனவும் தேனாரம் இணயத்தளத்திற்குத் தெரிவித்தார்.

மத்திய செயற்குழு கூடுகிறது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)