மத்திய செயற்குழு கூடியது

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு, கிழக்கின் களுவாஞ்சிக்குழுடியில் கூடி பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தது.

களுவாஞ்சிக்குடி சீ.மு. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் இன்று 07.01.2023 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ஆரம்பமான இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் முழு நாள் நிகழ்வாக மாலை வரை இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

துயர் பகிர்வோம்

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், எம். எ. சுமந்திரன், த. கலையரசன், முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் எம். சரவணபவன், தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேத்திரன் உட்பட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்ட ஆரம்பத்தில் மண்டபமுன்றலிலுள்ள முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் சீ.மு. இராசமாணிக்கத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன், கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா கட்சிக்கொடியையும் ஏற்றிவைத்தார்.

புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தை, அதிகாரப்பகிர்வு தொடர்பான சட்ட பூர்வ நிலைப்பாடுகள் என்பன தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

குறிப்பாக எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி போட்டியிடுவது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

பல உறுப்பினர்கள் இது விடயமாகக் கருதத்துக்களை வெளியிட்டதுடன் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் தனித்துப் பேட்டியிடுவதே பல்வேறு வகையிலும் வெற்றிகரமாகவும், சாத்தியமாகவும் அமையுமெனவும் தெளிவுபடுத்தினர்.

புதிய தேர்தல் முறை, தொகுதி, விகிதாசார தேர்தல் தனித்துப் போட்டியிடுவதால் கூடிய பிரதி பலன்களை அடைலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு, ஆட்சி அமைக்கும் போது கூட்டமைப்பாக இணையலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கட்சித்தலைவர் மாவை மற்றும் சட்டத்தரணி கே.வி. தவராசா ஆகியோர் இம்முடிவை எதிர்த்தனர். தேர்தல் வாக்குகளுக்காக பார்க்காது இனநலனைப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைத்தனர்.

எனினும் தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையெனவும், சில தினங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுடன் பேசிய பின்னரே முடிவு எடுக்கப்படுமெனவும் தலைவர் மாவை. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய செயற்குழுக் கூட்டம் முடிந்த கையோடு கிழக்கிலிருந்து தலைவர் மாவை. சேனாதிராசா கொழும்பிற்குப் பயணமானார்.

அதற்கிடையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழரசு கட்சியின் மூத்ததுணைத் தலைவர் பொன். சென்வராசா அவர்களை தலைவர் மாவை சேனாதிராசா நேரில் சென்று பார்வையிட்டார்.

அவருடன் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேரத்திரன் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.

மத்திய செயற்குழு கூடியது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)