மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவிருக்கும் அதேசமயம் வேறு சில மாவட்டங்களின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பத்து உள்ளுராட்சி மன்றங்களில் போட்டி இடுவதற்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செலுத்தியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம். தாஹிர் உட்பட கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்து கட்டுப்பணத்தை செலுத்தினர்.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கட்சி முக்கியஸ்தர்கள் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினர்.

இதனையடுத்து தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் கருத்து வெளியிடுகையில்;

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி சபைகளிலும் மக்கள் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாகவும், இம்முறை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிண்ணியா நகர, பிரதேச சபைகள், மூதூர், குச்சவெளி, தம்பலகாமம் ஆகிய ஐந்து சபைகளை மக்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் பல சபைகளில் மயில் சின்னத்தில் போட்யிடுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

பெரும்பாலான சபைகளை நாம் கைப்பற்ற இருப்பதுடன் எமது கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீனை பளிவாங்கிய ராஜபக்ஷக்களுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவர் எனவும் நம்புவதாக மேலும் கூறினார்.

மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)