புதிய தவிசாளராக சுதர்சன் தெரிவு

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து அப்போதைய தவிசாளர் அமரதாஸ ஆனந்த பதவியிழந்திருந்தார்.

இந்நிலையில், புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட கூட்ட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதற்காக நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பின்போது முதற் சுற்றில் மூவர் போட்டியிட்டிருந்தனர். அதில் ஆகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற திருமேனி யோகநாதன் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதுடன் இரண்டாம் சுற்றிற்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான அந்தோனி சுதர்சன் மற்றும் சிவலிங்கம் குணரட்னம் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

இதன்போது சபைக்கு சமூகமளித்திருந்த 13 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 02 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினருமாக 07 உறுப்பினர்கள் அந்தோனி சுதர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதேவேளை தான் உட்பட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 04 உறுப்பினர்கள் சிவலிங்கம் குணரட்னமுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பை தவிர்த்து, நடுநிலைமை வகித்திருந்தனர்.

இதையடுத்து மூன்று மேலதிக வாக்குகளால் அந்தோனி சுதர்சன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சபைக்கு வருகை தந்து புதிய தவிசாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

புதிய தவிசாளராக சுதர்சன் தெரிவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)