posted 25th January 2023
நிந்தவூர் கமு/ கமு - இமாம் றூமி வித்தியாலயத்தில் 2023 ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான பிரத்தியோக வகுப்புக்கள் அல் - பர்ஹான் சன சமூக நிலையத்தினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது உரையாற்றிய தவிசாளர் கடந்த 2022 ஆம் ஆண்டில் அல் - பர்ஹான் சன சமூக நிலையம் இப்பாடசாலையில் செயல்படுத்தியது போன்ற பாடநெறியினை மீண்டும் இவ்வருடத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக நடாத்துவதனையிட்டு சந்தோஷம் அடைகின்றேன். அத்தோடு பல சேவைகளை இந்நிறுவனம் பெறுவது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. இப்பாடநெறி முற்றிலும் இலவசமாக நடைபெறுவதினால் இங்கிருக்கும்
பெற்றோர்கள் அதனை பூரணமாக பயன்படுத்திக் கொள்வதில் சிரத்தை காட்டியாக வேண்டும் எனவும், புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் மாணவர்களும் அதற்கு அண்மித்த புள்ளிகளை பெறும் மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்று சிறந்த தொழில் வாய்ப்புகளை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு அவர்களின் கல்வியினை ஒவ்வொரு நாளும் கண்காணித்தவர்களாக செயல்படுவதன் மூலமே நாட்டின் சிறந்த பிரஜைகளை எமது பிரதேசத்தில் உருவாக்க முடியும். தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வாறான வகுப்புக்கள் நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறு பெற்றினை அடைவதோடு, ஒழுக்கமுடையவர்களாக உயர் தர பாடசாலைகளில் சென்று உயர் பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள வேண்டுமென தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)