பிரச்சார நடவடிக்கைகள்

இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றது.

குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பங்குபற்றுதலுடன், வேட்பாளர்கள் அறிமுகத்துடன் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த வட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் இத்தகவலை உறுதிப்படுத்தியதுடன், கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல சபைகளுக்கு மரச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும்,

இவற்றில் பெரும்பாலான சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்குமெனவும் தவிசாளர் அப்துல் மஜீத் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 100 உள்ளுராட்சி சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே முன்னாள் அமைச்சரும், நாடாறுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும், கிழக்கில் தமது மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ளன.

இதனால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளுக்குமிடையே பலத்த பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சார நடவடிக்கைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)