
posted 31st January 2023
முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும், வாழைச்சேனை பிரதேச செயலாளருமான திருமதி ஜெயானந்தி திருச் செல்வம், முன்னணி அஞ்சல் தொழிற்சங்கமான அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவை முதலாம் தர உத்தியோகத்தரான திருமதி. ஜெயானந்தி திருச் செல்வம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆறு வருடங்கள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவு கூர்ந்து மேற்படி பாராட்டும், கௌரவமும் அளிக்கப்பட்டது.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் 16 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் தலைவர் தேச மான்ய யூ.எல்.எம். பைஸர் தலைமையில், மாளிகைக்காடு பாவா றோயல் மண்டபத்தில் நடைபெற்ற போது விசேட நிகழ்வாக இந்தப்பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராக திருமதி ஜெயானந்தி திருச் செல்வம் கடமையாற்றிய காலத்தில், கிழக்கு அஞ்சல் குடும்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் அபிமானத்தையும் நம்பிக்கையையும் வென்ற ஒரு சிறந்த நிர்வாகியாக திகழ்ந்ததுடன், அவரது சிறந்த நிருவாகத் திறனுக்கும், சேவைக்கும் முக்கிய எடுத்துக்காட்டாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும், கிழக்குப் பிராந்தியத்திற்கான அஞ்சல் திணைக்கள நிருவாகக் கட்டிடத் தொகுதி திகழ்வதாகவும் கௌரவிக்கும் நிகழ்வில் சங்கத் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் கூறினார்.
இதன்போது தொழிற்சங்கம் சார்பில் வாழ்த்துப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டும், பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கியும், திருமதி. ஜெயானந்தி திருச் செல்வம் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் காமினி விமல சூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)