
posted 5th January 2023
அகப்பட்ட கோழித் திருடன்
புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 10 கோழிகளை திருடிய 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார் என அச்சுவேலி குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நேற்று முன் தினம் (03) செவ்வாய் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் கூறினர்.
இரவு நேரம் கோழிப் பண்ணைக்குள் நுழைந்து குறித்த நபர் கோழிகளை திருடியுள்ளார்.
இதனை அவதானித்த பெண் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பணிப்பாளர்
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எந்திரி நவரட்ணம் சுதாகரன் கடந்த 2ஆம்திகதி திங்கள் கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டார்.
இவர் ஆரம்பத்தில் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரிவு பொறியிலாளராக பதவி வகித்தார். 2008 ஆண்டில் கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளராக பொறுப்பேற்கும் இரணைமடுகுளம் புனரமைப்பு மற்றும் கல்மடுகுளபுனரமைப்பு என பாரிய வேலைத் திட்டங்களை நிறைவேற்றினார். 2019.03.08 இருந்து 31.12.2022 வரை முல்லைத்தீவு பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது
கிளிநொச்சி மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திங்கள் (02) காலை கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை அன்றே நடத்தப்பட்டது.
கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் திங்கள் காலை 26 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
திருடனை மக்கள் மடக்கிப்பிடித்தனர்
அச்சுவேலி வடக்குப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் திங்கள் (02) இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அவரிடமிருந்து 2 இலட்சம் ரூபா பெறுமதியிலான நகையும், பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டுபடுத்தப்பட்ட ரயில் சேவைகள்
கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவைக்காக மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, வவுனியா - அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றது .
அதனால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை , தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, ரயில் திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
அந்த வகையில் குறிப்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில் திணைக்களம், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.
1. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் யாழ் ராணி புகையிரதம் தற்போது முறிகண்டி வரை பயணிக்கின்றது. அதை வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று ரயிலில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா-அனுராதபுரத்திற்கு இடையே 20 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.
2. தனியார் போக்குவரத்துச் சேவை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்துக்கு சென்று அங்கே பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
3. நேரடியாக பஸ்களில் கொழும்புக்கு செல்லக்கூடியவாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றன. குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.
தற்போது 38 பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்புக்கு சேவையில் ஈடுபடுகின்றன. அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பஸ்கள் இருக்கின்றன. அந்த பஸ்களும் தற்போது கடந்த கால கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபடவில்லை. அந்த 33 பஸ்களையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு அதனோடு தொடர்புடையவர்களை கோரியுள்ளோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)